கண்டும் காணாத கண்ணும்
கேட்டும் கேட்காத காதும்
காட்டிக்கொண்டது கல் மனம் கொண்டவளென்று.
"உன் போல் கல் நான் அல்ல"
அவள் தோழி மொழிக்கு எதிர் மொழியாய்,
'கற்காலம் தொட்டு கணினி காலம் எட்டிய போதும்
பெண்மையுடன் ஒட்டியே பிறந்த இரட்டை குழந்தையாம் மென்மை.
பெண் மனம் இலக்கணம் வெறுத்தாலும் இயற்கையை மறுக்கவில்லை.
என் இதயம் தாங்கி துடிப்பதும் இரத்தமும் சதையும் தான்'
என கல்லும் கதற நினைத்த வேளையில்
கன்னி சிரித்துக் கொண்டே
'உளி கொண்டு உடைத்தாலும் உதிராமல்
உள் வாங்கி கலக்கத்தை கல்லறையிலிட்டு
கலை நயத்தை காட்சிக்கு காட்டும்
கல்வெட்டை ஒத்த கள்ளமில்லா கல் தான் என் மனம்' என்றாள்.
வலிமைக்கே வலிக்கும் பட்சத்தில்
கல்லுக்குள் ஈரத்தை காட்டி கொடுத்து விடும்
கண்ணோர ஈரம்..
கண்ட பின்னாவது உணரவும்
அவள் கல் அல்ல
கண்ணாடி என்று...