சனி, 1 டிசம்பர், 2012

பழைய நான்

மாலை வேளையில் பேருந்து நிறுத்தத்திற்கு கையில் பரீட்சை பேப்பரையும், களைத்த முகத்துடனும் வந்த டீச்சரை பார்த்ததும்,
புருவங்கள் உயர்த்தி சீருடையின் விளையாட்டின் சின்னமான மண் புழுதியை தட்டிவிட்டு , தலை கோதிய படியே பத்து அடி எட்டி சென்று,பார்வை படாமல் கை கட்டி நின்றவன்,
ஒரே பேருந்தில் முன் படியில் அவனும் பின் படியில் டீச்சரும் ஏறி எதிர்பாரத விதமாய் எதிர்பட்ட போது, 'மாட்டிக்கிட்டேனா  இன்னைக்கு' என்ற மனநிலையில், சட்டென்று
 "good morning miss,
good afternoon miss
good evening miss"
 இதில் எதுவும் கை கொடுக்காத  நிலையில் அவனை மறந்த அனிச்சை செயலாய் அகன்று விரிந்த விரல்களும் நெற்றிக்கு முட்டுக்கொடுத்து நின்றது.. அவள் அவனை கண்ணெடுத்தும் பார்க்காமல் இலக்காய் இருந்த இருக்கையை பாய்ந்து ஓடி பிடித்து "அப்பாடா" என்று அமர்ந்த வேளையில் "அப்பாடா தப்பிச்சேன்டா சாமி" என்ற அச்சிறுவனின் மௌன மொழிக்கு ஒலி கொடுத்தது அப்போது அவன் விட்ட பெரும் மூச்சும், வட்டமிட்டு அயர்ந்த அவன் விழிகளும்...
இதை பார்த்த தருணத்தில்
உதட்டில் சிரிப்பையும், உள்ளத்தில் 1997 -இல் இருந்த என்னையும் வரவழைத்து சென்றான் அச்சிறுவன்..:):)

செவ்வாய், 20 நவம்பர், 2012

கவிதையை கலாய்போம்.!!

கவிதை விரும்பிகள் தயவு செய்து கடுப்பாக வேண்டாம். நான் கலாய்க்க போறது, கவிதை என்கிற பெயரில் இங்க கிறுக்கிட்டு
இருக்கும் கிறுக்கல்களை மட்டுமே.!!
கலாய்ப்பதை படிச்சு அனுபவிங்க ஆராயாதிங்க,

"மேல் வரியில எழுத எவ்வளவோ இடம் இருந்தாலும் அத அப்படியே விட்டுட்டு அடுத்த வரியில எழுத தொடங்கினா அது தான் கவிதை"
அந்த நம்பிக்கையில தான் நான் கவிதை எழுதலாம்னு களத்துல இறங்கிட்டேன்.
"கவிதைக்கு பொய் அழகு- அட பொய் தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே.!!" என்ற ஆர்வத்தில் காகிதத்திற்கும் பேனா முனைக்கும் இடையிலான காற்றில் கவிதை நயம் அபிநயம் பிடிக்க காத்துக்கிடந்த தருணங்கள் பல.

கவிதைக்கு இன்னொரு முக்கியமான தகுதி முதல் தடவை படிச்சா புரியவே கூடாது.
நான் எழுதுன கவிதை பத்து தடவை படிச்சும் கூட புரியவே இல்லன்னு சிலர் சொன்னப்ப, " அடடே நீ சாதிச்சுட்ட போ"-ன்னு எனக்கு நானே சொல்லி சந்தோசப்பட்டேன். இதுல என்ன சிக்கல்னா, என் கவிதை எனக்கே
சில சமயம் புரியாமல் போனதால சாதிச்சேன்னா இல்ல சொதப்பிட்டேன்னோ-ன்னு சந்தேகமும் வந்தது.
இறுதியாக, "கவிதை நடை இல்லை, தெளிவு இல்லை" என்ற உண்மையான விமர்சனங்கள் உணர்த்தியது, நான் இங்க எழுதுவதெல்லாம் கவிதை அல்ல கிறுக்கல்களே என்று.

என் கிறுக்கல்களும் என்னை சார்ந்த ஒரு சிலருக்காவது என்றாவது கவிதையாய் கண்ணில் தெரியும் என்ற நம்பிக்கையில் கிறுக்கல்கள் தொடரும்...!!

திங்கள், 5 நவம்பர், 2012

காட்சிப் பிழை

அதிகாலை முதல் அந்தி மாலை வரை கண் கொட்டாமல் சுற்றி வந்ததில் சற்று கர்வம் கொண்டேன்.

எங்கு சுற்றினால் என்ன.? பார்வை எல்லைக்குள் இருந்ததில் சற்று அலட்சியம் கொண்டேன்.

பொழுது சாயக் கண்டதும்,
கழற்றி விட்டேன் கர்வத்தை,
விரட்டி விட்டேன் அலட்சியத்தை,
சூட்டிக் கொண்டேன் கண்களில் கலக்கத்தை,
கேட்டுக்கொண்டேன் எனக்குள் நானே,
"யார் அழுதார்கள்,
பூமி தன்னை தானே சுற்றி கொள்ளவில்லை என்று"

'கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு.?'
என்ற ஆறாம் அறிவின் அறிவுரை,
ஆற்றிவிட்டது அடிப்பட்ட அகத்தை.

கண்ணின் காட்சிப் பிழைக்கு,
கதிரவனை மட்டும் குற்றம் சொல்வதில் என்ன நியாயம்.!


வியாழன், 1 நவம்பர், 2012

தலைவியின் நினைவில் தலைவன்

காற்றோடு மழைநீர் கலந்து
சாரலாய் முகத்தில் அடித்தது.
ஜன்னலோரத்தில் காப்பிக்கோப்பையோடு நான்.!
உழைப்பினால் மறந்துபோயிருந்த நினைவுகள்,
களைப்பினால் நான் எடுத்த விடுமுறையன்று.
காற்றோடு கலந்து வந்த சாரலில்,
பத்துத் துளிகளில் பாதித்துளிகள்
கொண்டிருந்தது உந்தன் முகம்தானடி..!

இவண்,

சுட்ட கவிதையை கூட சொந்த கவிதை போல் வெளியிடும் நல்ல உள்ளம் .# பதிவுரிமை தோழியிடம் இருந்து பெறப்பட்டது.:P#

சனி, 27 அக்டோபர், 2012

தத்துவத்தின் நிறம் கறுப்பு வெள்ளை

வாழ்க்கையின் எல்லா அணுகுமுறையையும் அழகான தெளிவான எளிமையான தத்துவமாய் கட்டி வைக்கப்பட்ட புதையல் மூட்டை கறுப்பு வெள்ளை பாடல்கள்.
படிக்கும் போது தூக்கம் வராம இருக்க தொலைக்காட்சி பார்ப்பது பள்ளி படிக்கும் போது எனக்கிருந்த ஒரு பழக்கம். குறிப்பாக கணக்கு போடும் போது விடிய விடிய தொலைக்காட்சி பார்த்ததெல்லாம் ஒரு காலம். அந்த இலட்சணத்தில படிச்சும் கூட இளங்கலைப் பட்டம்
பொறியியல் துறையில் எப்படி கிடைத்தது என்பது எனக்கே ஆச்சர்யமாக தான் இருக்கு.
சரி விடுங்க என் சொந்த கதை சோக கதை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அப்படி படிச்ச காலத்துல 12 மணிக்கு மேல எல்லா அலைவரிசையிலும் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளை பாடல்களில் என் நெஞ்சில் நின்ற பாடல்களையும் அதில் எனக்கு பிடித்த வரிகளையும்
உங்களோட பகிர்ந்து கொள்ளனும்-ன்னு ஒரு ஆசை.
1) பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா.? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடண் சொன்னது. அதல் அர்த்தம் உள்ளது.

http://www.youtube.com/watch?v=u2uTvseL6Rw&feature=youtube_gdata_player

2) உட்சி வெயில் சூரியனை மேகம்
மூடுது. நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது. காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது. பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது.

http://www.youtube.com/watch?v=jUI2AlaUsOA&feature=youtube_gdata_player

3) கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே. நடனப்போர்.
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8&feature=youtube_gdata_player

4) தமிழுக்கும் அமுதென்று பேர்.
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

5)சிந்து நதியின் இசை நிலவினிலே,# தேசிய ஒருமைப்பாட்டை வழியுறுத்தும் அருமையான பாடல்.#
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

6) ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவடி வீதியிலே அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே.

கையில் உள்ளதை கொண்டு இங்கு வாழ்வதிலே இந்த இல்லத்தின் நிம்மதி வாழுமடி.

வீட்டிற்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டிற்கு பங்கிட்டு வாழ்வது இன்பமடி.
http://www.youtube.com/watch?v=aSadfMd1m-M&feature=youtube_gdata_player

வியாழன், 25 அக்டோபர், 2012

கவித்துளி

"கவிதை காதலின் வெளிப்பாடு" தோழி மொழி.
"கவிதையை காதலிக்கும் காதலி" என் வழி.

நிலாச்சோறு

பதம் பார்த்து வடித்த சோற்றில் பருப்பும் பட்டும் படாமல் நெய்யும் கலந்து கடைந்த அமிழ்தத்தை, பால் நிலாவை காட்டியும் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லியும் ஊட்ட முற்பட்ட போது இடுப்பில் இருந்து உதறி இறங்கி ஓட்டம் காட்டியது பச்சிளம் குழந்தை. அதன் ஓட்டத்திற்கு ஓடியும், ஆடியும்,பாடியும் ஊட்டி முடித்தாள்.
எப்படி சொல்லி புரிய வைப்பேன் அந்த விளையாட்டு பிள்ளைக்கு, இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் இவை அனைத்தும், விடுதியில் காய்ந்த சப்பாத்தி உண்டு காற்று வாங்க சென்ற போது, பக்கத்து வீட்டு மாடியில் ஒரு பாச போராட்டமாய் பார்த்து ஏங்க தான் முடியும்.
எத்தனை வயதானால் என்ன,இப்போதும் என் பிடிவாதம் அவளோடு மட்டும் தான்.


சனி, 28 ஜூலை, 2012

கள்ளமில்லா கல் 'அவள்'


கண்டும் காணாத கண்ணும்
கேட்டும் கேட்காத காதும்
காட்டிக்கொண்டது கல் மனம் கொண்டவளென்று.

"உன் போல் கல் நான் அல்ல"
அவள் தோழி மொழிக்கு எதிர் மொழியாய்,

'கற்காலம் தொட்டு கணினி காலம் எட்டிய போதும்
பெண்மையுடன் ஒட்டியே பிறந்த இரட்டை குழந்தையாம் மென்மை.
பெண் மனம் இலக்கணம் வெறுத்தாலும் இயற்கையை மறுக்கவில்லை.

என் இதயம் தாங்கி துடிப்பதும் இரத்தமும் சதையும் தான்'
என கல்லும் கதற நினைத்த வேளையில்

கன்னி  சிரித்துக் கொண்டே
'உளி கொண்டு உடைத்தாலும் உதிராமல்
உள் வாங்கி கலக்கத்தை கல்லறையிலிட்டு
கலை நயத்தை காட்சிக்கு காட்டும்
கல்வெட்டை ஒத்த கள்ளமில்லா கல் தான் என் மனம்' என்றாள்.

வலிமைக்கே வலிக்கும் பட்சத்தில்
கல்லுக்குள் ஈரத்தை காட்டி கொடுத்து விடும்
கண்ணோர ஈரம்..

கண்ட பின்னாவது உணரவும்
அவள் கல் அல்ல
கண்ணாடி என்று...

ஞாயிறு, 24 ஜூன், 2012

பாட்டும் நானும்




1) +2 படிக்கும் ஒரு தடவை maths test- ல mark ரொம்ப கம்மியானதால் எங்க 
maths miss என்னைய புடிச்சு கண்ணா பின்னானு திட்டி exam paper –அ மூஞ்சி மேலேயே விட்டு எறிஞ்சுட்டாங்க. அந்த paper-அ கையில எடுத்துட்டு என் friends கிட்ட வந்து..
                      " மரணம் என்னும் தூது வந்தது அது 
                        Maths miss என்னும் வடிவில் வந்தது”
                        “எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று ,பாடுங்கள் என் கல்லறையில் இவள் பைத்தியக்காரி என்று "


இப்படி பாடி முடிக்கிறதுக்குள்ள maths miss class- குள்ள entry ஆகிட்டாங்க..
அப்புறம் என்ன டமால் டுமீல்-னு HM வரைக்கும் matter leak ஆகி school முழுக்க famous ஆகிட்டேன்..

பாட்டு :: "யாருக்காக இது யாருக்காக"
படம்:: வசந்த மாளிகை 


2) XYZ company-ல interview முடிச்சு 2 நாள் கழிச்சு தான் result சொன்னங்க  
Result அன்னிக்கு முன்னாடி நாள் room-ல ஒருத்தருக்கும் தூக்கமே வரல. ஒரே பீதி-ல இருந்தோம்.அப்ப இந்த பாட்டெல்லாம் போட்டு எங்கள நாங்களே தேத்திகிட்டோம்.

      வாழ நினைத்தால் வாழலாம் , வழியா இல்லை பூமியில்"

“ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-ன்னு அனுப்பி வெச்சான்
...........
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன் 
போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்"

எப்படியோ அந்த  company லேயே  room ல எல்லாரும் place ஆகிட்டோம்.. அடுத்த நாள் evening ஒரே ஆட்டமும் பாட்டும் கொண்டாட்டமும் தான்.

மனசு கஷ்டமா இருந்தா , கோபம் வந்தா ,துக்கம் வரலன இப்படி பல சூழ்நிலைகளில் எனக்கு துணையாய் வருவது பாடலும் அதன் வரிகளும் ...



வெள்ளி, 20 ஏப்ரல், 2012

முரண்பாடுகளின் மூட்டை


விஞ்ஞானமோமுன்செலுத்த
மெய்ஞானமோ பின்செலுத்தி
விதி விளையாடி கொண்டு தான் இருக்கிறது
என் சிந்தையுடன் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி..

காலத்திற்கு ஏற்றது போல் மாறதான் வேண்டும் என்றாலும் 
காலத்தை காட்டும் கடிகாரமோ
கடிகார திசை மறுத்து எதிர்திசையில்
சுழன்றதாய்
வரலாற்று சரித்திரமும் இல்லை.
வருங்காலமும் அதை வரவேற்பதாய் தெரியவில்லை

எந்நாளும் மாற்றத்தை மறுப்பவள் அல்ல நான்
மலர்ச்சி தரும் மாற்றத்தை மதிப்பவள் தான் நான்

பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வதும் ஒரு மாற்றம் தான்
சூரியனை சுற்றி வருவதும் ஒரு மாற்றம் தான்
இவ்விரு மாற்றம் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனித இனம்
பூமி தன் சுற்றுப்பாதையில் சற்று விலகிச்
சுற்றும் மாற்றத்தை மட்டும் மறுப்பதில் தவறேதும் உண்டோ?

எனவே ஊருடன் ஒத்து வாழ துணிவேன்
ஒருபோதும் ஊருக்காக எனக்கு ஒவ்வாத ஒன்றாய்
வாழ துணியேன்

பழமையில் ஊறி திளைத்த என் மனம்
புதுமையை வெறுத்ததில்லை ஓர் நாளும்..
பொறுத்திருப்பேன் பொறுமையுடன் புதுமையும்
எனக்கேற்ற பழமையாய் மாறும் வரை..

சனி, 7 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கா ?? இல்லையா ??


முன்குறிப்பு :

"இவை அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துகளே .
எந்த வித கொள்கை திணிப்பு நோக்கமும் எனக்கில்லை "

இதில் ஏதாவது கருத்துகள் உங்களது கருத்துகளுடன் முரண்பட்டு இருந்தால் 'இவ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது '-ன்னு சொல்லி தட்டிவிட்டுட்டு போய்கிட்டே இருங்க .. ஏன்னா இந்த விஷயத்தை பொருத்த வரைக்கும் 'நம்ம கருத்துகளை மற்றவர்களும் ஏற்று கொள்ளவேண்டும் '-ன்னு நினைக்கிறோம் பாருங்க, அது தான் நம்ம பண்ணுற ரொம்ப பெரிய தப்பு .
                                                           __________________

கடவுள் இருக்கா ? இல்லையா?? ன்னு என்னை பார்த்து கேட்டால் அதுக்கு என்னோட பதில் 'ஒன்னு இருக்கு ஆனா இல்ல அதான் கடவுள்'. அப்படி தான் ஒரு காலம் வரைக்கும் நெனச்சுட்டு இருந்தேன்..

ஆரம்ப கல்வி படித்த வரியில் ஆசிரியை சொல்வதே வேத வாக்கு என்று எண்ணி 'கடவுள்'-ன்னு ஒன்னு இருக்கு. அது நல்லவர்களுக்கு நல்லது பண்ணும் கேட்டவர்களுக்கு தண்டனை கொடுக்கும்-ன்னு நம்பிக்கொண்டுதான் இருந்தேன். 
அப்பாவிடம் இதை பற்றி கேட்டால் " அடபோமா சாமியாவது பூதமாவது..அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது' என்று சொல்லி விடுவார்.
ஆனா அம்மாக்கு கடவுள் மேல 100 % நம்பிக்கை இருக்கு.. 

என்னை சிந்திக்க வைத்த அப்பாவின் கேள்வி:
சுனாமி பூகம்பம் இதனால அப்பாவி மக்களும் சின்ன குழந்தைகளும் இறப்பதை கண்டும் கடவுள் ஏன் காப்பாற்ற வரல..??


அப்பறம் தான் புரிஞ்சுது கடவுள்-ன்னு ஒன்னு இல்லை. ஆனா இயற்கை -ன்னு ஒன்னு இருக்கு .அதுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு-ன்னு தெரியாது.
நான் பெரியவனா இல்ல நீ பெரியவனா -ன்னு மனிதர்களுக்குள் சண்டை வரும் போது, நான் இருக்கேன்டா உங்க எல்லாத்தையும் விட பெரியவன் என்று இயற்கை சீற்றத்தின் மூலமாக பதிலடி கொடுக்கும்.

எனது பார்வையில் கடவுள்:
நம்ம படைத்தது தான் கடவுள்-னா? நம் பெற்றோர்கள் தானே நமக்கு கடவுள். அவங்கள வணங்கி வழிபட வேண்டாம். கடைசி வரைக்கும் நல்லா வாழ வைத்தால் போதும்.


பாடல் வரிகளில் நான் உணர்ந்த கடவுள்:


"பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம் "
"தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்.
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்"


கஷ்டப்படும் மனிதற்காக கடவுளிடம் வேண்டும் உதடுகளை விட
அவர்களை காப்பாற்ற கொடுக்கப்படும் கைகள் மேலானது.


இந்த பதிவின் மூலமா நான் சொல்ல வரும் இரண்டு விஷயங்கள்:

1 ) உங்களோட மத கொள்கைகளை மற்றவர்கள் மேல் திணிக்க வேண்டாம் .


"பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொன்னதில்லை"




2 ) கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம் தப்பில்லை.ஆனால்


கடவுளின் பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டாமே..


இத நச்சுனு நாலு வரில சொல்லணும்-னா 


"கடவுள் இல்லை-ன்னு சொல்றான் பாரு 

அவனை நம்பலாம்.

கடவுள் இருக்கு-ன்னு சொல்றான் பாரு 

அவனை கூட நம்பலாம்.

ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாருங்க 

அவனை மட்டும் நம்பிடவே கூடாது."

dangerous pellows ..:D 

-crazy மோகன் வசனம் (வசூல் ராஜா M.B.B.S)


இவண்

நாத்திகவாதி அல்ல

முற்போக்கு சிந்தனையாளர் 

சனி, 31 மார்ச், 2012

கேளுங்க கேளுங்க




அனுபவித்து  கேட்டு பாருங்க..


http://www.raaga.com/player4/?id=5210&mode=100&rand=0.3732793109957129




பச்சக்கிளி பச்சக்கிளி சுகமா சுகமா ?? மூக்கு யாருக்கும் வருமா வருமா ??
உனக்கும் எனக்கும் காயா பழமா ?? போமா..



தாமரை பூ தாமரை பூ நலமா நலமா வெட்கம் யாருக்கும் வருமா வருமா?? தண்ணிக்குள்ள என்ன தவமா தவமா ??  வாமா..


மீன்களே சின்ன மீன்களே உங்கள் செதில்களை எண்ணவா ..??
போட்டியும் போட்டு நானும் தான் நீந்தவா ??





சிரித்து வாழ வேண்டும்..



:)........... :)............ :)............ :)................. :)

 புரிந்து கொண்டீர்களா எனது பொன்னான புன்னகை மொழியை..???

வெள்ளி, 30 மார்ச், 2012

ஆசை யாரை விட்டது...

என்ன எழுதுவது என்று வெகு நேரமாக மண்டையை குடைந்தும் எதுவுமே
வராத காரணத்தால், ஏன் எழுத வேண்டும் என்ற விபரீத ஆசை வந்தது என்பதையே இங்கு கிறுக்க உள்ளேன் .


முதல் பதிவை விறுவிறுப்பாக்கும் ஆர்வத்துடன் எனது எழுத்துக்களுடன் எனது
மனசாட்சியின் மௌன மொழிக்கும் எழுத்து வடிவம் கொடுத்து இணைக்க உள்ளேன். # ( மனசாட்சி பேசுறது இந்த அடைப்புக்குள் வரும் ) #

இந்த வலைப்பதிவை நான் தொடங்க தூண்டுதலாய் இருந்த எனது நெருங்கிய தோழிகளுக்கும் மற்றும் சில முகம் தெரியாத வலைப்பதிவாளர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் ..
#( ஆமாம் இவங்க பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதி முடிச்சுட்டாங்க. இன்னும்  ஒரு பதிவ கூட முழுசா முடிக்கல  அதுக்குள்ள கோடான கோடி நன்றியெல்லாம் சொல்லி build up -அ பாரு நாய்க்கு ..!!)#


மூன்று வருடத்திற்கு முன்பு ஆர்குட்-ல சேரவே ஆயிரம் முறை யோசிச்ச எனக்கு, இப்ப blog எழுதுற அளவிற்கு தைரியம் வந்துருக்குனா அதுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
 #( blog ஆரம்பிக்கிறதுக்கு எதுக்கு கொலை பண்ண போற மாதிரி பயந்து சாகுற )#


காலேஜ்-ல இருந்த வரைக்கும் என்ன தான் கிளாஸ்-ஏ நடக்கலனாலும் , 24 மணி நேரம் வெட்டியாவே இருந்தாலும் வெறுமையாய் பீல் பண்ணுனதே கிடையாது.
ஆனா இப்ப என்னதான் வேலைக்கு போனாலும் , ஒரு நாளைக்கு 24 மணி நேரம் பற்றாமலே இருந்தாலும் வாழ்க்கை நிறைவாகவே இல்லை.
#(cut cut cut இந்த sentiment scene எல்லாம் உனக்கு work out ஆகாது. ஒழுங்கா comedy மட்டும் try பண்ணு )#

இந்த blog எழுதும் எண்ணம் வர காரணங்கள்:


முதல் point
1) வாழ்க்கையை அழகா வாழ்ந்து பார்க்கணும் -ன்னு ஒரு ஆசை தான்


கடைசி point-ம் அதே தான் ..
#( இப்படி point போட்டு எழுதின மட்டும் இந்த பதிவுக்கு 10-க்கு  10 மார்க் போடுவாங்க-ன்னு கனவுல கூட நினைக்காத ..)#

சரி இப்ப straight -அ உண்மையான காரணத்தையும் சொல்லிடுறேன் .#( அப்ப இது வரைக்கும் சொன்னது எல்லாம் தில்லு முல்லு தானா ???)# 


பொதுவாகவே எனக்கு மொக்கை  போடுவது ஒரு பொழுதுபோக்கு .#(அட இப்பவரைக்கும் உன் முழு நேர பொழப்பே அது மட்டும் தானா..??)#

கேட்கறவங்க கண் , காது மற்றும் மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு மொக்க போட்டதால் அவங்க கடுப்பாகிட்டாங்க .#(இந்த பாவம் எல்லாம் உன்னை சும்மாவே விடாது )#
அதுக்காக நம்ம கொள்கையை கைவிட முடியுமா ?? #( பெரிய மண்ணாங்கட்டி கொள்கை , மூஞ்சிய பாரு)#
'தமிழ்நாட்டு காரன் பேசலனா தான் செத்து போய்டுவன்'ன்னு ஏதோ ஒரு தமிழ் படத்துல கூட சொல்லி இருகாங்க.
'எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது '#( அன்புகரசு IAS -னு மனசுல நெனைப்பு .. "நெனைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம் ")# ஆனா எனக்கு பொழப்பே இப்படி எல்லாம் நெனைக்கிறது தான் ..


அதுக்காக வைரமுத்து , சுஜாதா, தாமரை range-க்கு எல்லாம் தயவுசெய்து expect பண்ணிடாதிங்க .. என்னால முடிஞ்சஅளவுக்கு நல்ல பதிவுகளை போட்டு உங்களை சிரிக்க வைத்து , சில நேரம் சிந்திக்கவும் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் #( என்ன கேட்காம எப்படி நீ அதெல்லாம் முடிவு பண்ணலாம் )#


அவ்வளவுதாங்க..


இந்த பதிவிலிருந்து நீங்க என்ன புரிஞ்சுக்கிட்டிங்க-ன்னு எனக்கு சத்தியமா தெரியாது ..
ஆனா ஒன்னு மட்டும் உங்களுக்கு தெளிவா புரிஞ்சு இருக்கும் .
" இந்த உலகத்தில நான் அதிகமா bun வாங்குவது ஏன் மனசாட்சியிடம் இருந்துதான்"-னு தெரிஞ்சு இருக்கும்
 #(fact fact fact fact )#