சனி, 25 மே, 2013

எந்நாளும் இனிமை நீ

வாடிக்கையான எந்திர வாழ்க்கையின் வழி அடைத்து
வசந்தத்தின் வாசல் திறந்தாய் நீ..

கட்டி வைத்த விளையாட்டுதனங்களுக்கு 
இறக்கை கட்டி பறக்க செய்தாய் நீ..

உன் வரவால்,

மழையில் மழலைதனம்..


மலருடன் மனம் விட்டு பேச்சு 




புத்தகம் படித்தே புலர்ந்த பொழுதுகள் .



நிலவுடன் ஊடல் 


நிழலுடன் சிநேகம் 



அந்தியில் ஆதவன் மேல் கோபம் 




என் காக்கை குரலையும் 
குயில் கூவும் குழல் ஓசையாக்கும் முயற்சிகள்..

என் காகித கிறுகல்களையும் 
கலை கசியும் ஓவியமாக்கும் முயற்சிகள் ..




என் சிந்தனை சோலையில் எண்ணங்கள் 
புகைபடியாமல் இருக்க புகைப்படங்கள் ..

பலருக்கு ஏனோ கொடுமையான சோகம் நீ ..!!
எனக்கு எந்நாளும் இனிமையான சுகம் நீ..!!

யார் அந்த நீ.?
  ______

எந்நாளும் இனிமை தரும் பொன்னான நீ.??
______

தனித்துவத்தை தலை தூக்கிய நீ.?

______

கோடிட்ட இடத்தை நிரப்பியதோடு 
வாழ்வில் கொண்டாட்டத்தை நிரப்பிய 
என் அருமை 

தனிமை

தனிமையின் முழுமையை உணர்ந்தவர்க்கு 
தனிமையும் இனிமையே ..!!









ஞாயிறு, 10 மார்ச், 2013

சூது (ஓ )ஆட்டம்


போலி புற சிரிப்பும், பொய் பூசிய சொல்லோடும்
போராடும் பொழுதாவே  புலருது ஒவ்வொரு தித்திகாத திங்களும் ..

கானல் நீருல நீந்த சொல்லி கேட்குது கல்வி.
விண்மீனுக்கு தூண்டில் போட்டு நெச மீன கேட்டு நிக்குது பட்டப்படிப்பு 
விண்மீனுக்கு பதிலா மின்மினிய புடித்திட பாக்குது சுய புத்தி ..


தொட்டாசிணுகி -ன்னும் கிணத்து தவளனும் கொத்தி கீழ் இறக்க பாக்குது சில 
பரமபத பாம்புக..

தொட்டாசிணுகி  சிணுங்கிறதும் சுருங்குறதும் அத பொருத்த மட்டும் தற்காப்பு கலை -ன்னும் ,
கிணத்து தவளை உலகறியாது -ன்னு சொன்னவக கிட்ட 
உலகமும் அறியாது தவளை மட்டும் அறிந்த கிணத்து உலகத்த-ன்னும் 
சொல்லி சொல்லி பலவீ னத்திலும் பலத்த பாத்துகிட்டோம்.

முகம் பாத்து வாள் வீசும் எதிரிகள கண்டு பயமில்ல என்றாலும் 
முதுகு பக்கம் குழி வெட்டும் துரோகிகள கையாள துணிவில்ல என்பது தான் உண்மை .

அவன் கஷ்டம் அவனுக்கு என சொல்லி துரோகியையும் தியாகியா நெனச்சதலோ என்னவோ பழிச்சு கட்டுது ஒரு கூட்டம் பொழைக்க தெரியாதவங்க-ன்னு 

பொழைக்க தெரியுமா தெரியாதா -ன்னு கேட்டும் பார்த்தேன் புத்திக்கு புடிபடல விடை .

மத்தவங்க பொழப்புல மண் அள்ளி போட தெரியாதுன்னு  உறுதியா சொல்லுது உள் மனசு.  

வாழ்க்க பாதையில சூதோடும் வாதோடும் ஓடும்  துரோகிகளுக்கும்  ஒதுங்கி நின்னு வழி கொடுத்து நிதானமா பொடி நடையா போகுது எங்க பொழப்பு..

சனி, 1 டிசம்பர், 2012

பழைய நான்

மாலை வேளையில் பேருந்து நிறுத்தத்திற்கு கையில் பரீட்சை பேப்பரையும், களைத்த முகத்துடனும் வந்த டீச்சரை பார்த்ததும்,
புருவங்கள் உயர்த்தி சீருடையின் விளையாட்டின் சின்னமான மண் புழுதியை தட்டிவிட்டு , தலை கோதிய படியே பத்து அடி எட்டி சென்று,பார்வை படாமல் கை கட்டி நின்றவன்,
ஒரே பேருந்தில் முன் படியில் அவனும் பின் படியில் டீச்சரும் ஏறி எதிர்பாரத விதமாய் எதிர்பட்ட போது, 'மாட்டிக்கிட்டேனா  இன்னைக்கு' என்ற மனநிலையில், சட்டென்று
 "good morning miss,
good afternoon miss
good evening miss"
 இதில் எதுவும் கை கொடுக்காத  நிலையில் அவனை மறந்த அனிச்சை செயலாய் அகன்று விரிந்த விரல்களும் நெற்றிக்கு முட்டுக்கொடுத்து நின்றது.. அவள் அவனை கண்ணெடுத்தும் பார்க்காமல் இலக்காய் இருந்த இருக்கையை பாய்ந்து ஓடி பிடித்து "அப்பாடா" என்று அமர்ந்த வேளையில் "அப்பாடா தப்பிச்சேன்டா சாமி" என்ற அச்சிறுவனின் மௌன மொழிக்கு ஒலி கொடுத்தது அப்போது அவன் விட்ட பெரும் மூச்சும், வட்டமிட்டு அயர்ந்த அவன் விழிகளும்...
இதை பார்த்த தருணத்தில்
உதட்டில் சிரிப்பையும், உள்ளத்தில் 1997 -இல் இருந்த என்னையும் வரவழைத்து சென்றான் அச்சிறுவன்..:):)

செவ்வாய், 20 நவம்பர், 2012

கவிதையை கலாய்போம்.!!

கவிதை விரும்பிகள் தயவு செய்து கடுப்பாக வேண்டாம். நான் கலாய்க்க போறது, கவிதை என்கிற பெயரில் இங்க கிறுக்கிட்டு
இருக்கும் கிறுக்கல்களை மட்டுமே.!!
கலாய்ப்பதை படிச்சு அனுபவிங்க ஆராயாதிங்க,

"மேல் வரியில எழுத எவ்வளவோ இடம் இருந்தாலும் அத அப்படியே விட்டுட்டு அடுத்த வரியில எழுத தொடங்கினா அது தான் கவிதை"
அந்த நம்பிக்கையில தான் நான் கவிதை எழுதலாம்னு களத்துல இறங்கிட்டேன்.
"கவிதைக்கு பொய் அழகு- அட பொய் தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே.!!" என்ற ஆர்வத்தில் காகிதத்திற்கும் பேனா முனைக்கும் இடையிலான காற்றில் கவிதை நயம் அபிநயம் பிடிக்க காத்துக்கிடந்த தருணங்கள் பல.

கவிதைக்கு இன்னொரு முக்கியமான தகுதி முதல் தடவை படிச்சா புரியவே கூடாது.
நான் எழுதுன கவிதை பத்து தடவை படிச்சும் கூட புரியவே இல்லன்னு சிலர் சொன்னப்ப, " அடடே நீ சாதிச்சுட்ட போ"-ன்னு எனக்கு நானே சொல்லி சந்தோசப்பட்டேன். இதுல என்ன சிக்கல்னா, என் கவிதை எனக்கே
சில சமயம் புரியாமல் போனதால சாதிச்சேன்னா இல்ல சொதப்பிட்டேன்னோ-ன்னு சந்தேகமும் வந்தது.
இறுதியாக, "கவிதை நடை இல்லை, தெளிவு இல்லை" என்ற உண்மையான விமர்சனங்கள் உணர்த்தியது, நான் இங்க எழுதுவதெல்லாம் கவிதை அல்ல கிறுக்கல்களே என்று.

என் கிறுக்கல்களும் என்னை சார்ந்த ஒரு சிலருக்காவது என்றாவது கவிதையாய் கண்ணில் தெரியும் என்ற நம்பிக்கையில் கிறுக்கல்கள் தொடரும்...!!

திங்கள், 5 நவம்பர், 2012

காட்சிப் பிழை

அதிகாலை முதல் அந்தி மாலை வரை கண் கொட்டாமல் சுற்றி வந்ததில் சற்று கர்வம் கொண்டேன்.

எங்கு சுற்றினால் என்ன.? பார்வை எல்லைக்குள் இருந்ததில் சற்று அலட்சியம் கொண்டேன்.

பொழுது சாயக் கண்டதும்,
கழற்றி விட்டேன் கர்வத்தை,
விரட்டி விட்டேன் அலட்சியத்தை,
சூட்டிக் கொண்டேன் கண்களில் கலக்கத்தை,
கேட்டுக்கொண்டேன் எனக்குள் நானே,
"யார் அழுதார்கள்,
பூமி தன்னை தானே சுற்றி கொள்ளவில்லை என்று"

'கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு.?'
என்ற ஆறாம் அறிவின் அறிவுரை,
ஆற்றிவிட்டது அடிப்பட்ட அகத்தை.

கண்ணின் காட்சிப் பிழைக்கு,
கதிரவனை மட்டும் குற்றம் சொல்வதில் என்ன நியாயம்.!